×

தீமையை வெறுத்து நன்மையை பற்றிக்கொண்டிருங்கள்!

கிறிஸ்தவம் காட்டும் பாதை

இதமான மென்காற்று, தவழ்ந்து வரும் இப்புதிய விடியலில், எம்குடிகளோடு உறவாடுவது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. புதிய விடியல் என்பது பழையன கழிதலும் புதியன புகுதலுமான அனுபவத்தையே தினமும் கற்பிக்கின்றன. நேற்றைய இராவிருள், இன்றைய புதிய விடியலால் மறைந்துவிட்டன அல்லவா? எனக்கு மிகவும் இனிமையான உடன்பிறப்புகளே, நேற்றிரவு வரை உங்களால் மறக்க இயலாத வைராக்கியங்கள், பகைகள், கோபங்கள் மற்றும் பொறாமைகளான இருளை கிழக்கில் இருந்து எழும்பியுள்ள ஆதவன், வீசும் சுடர் ஒளியினால் உங்களிடத்தினின்று மறைந்து போகட்டும் என்று வாழ்த்து கூறுகிறேன்.

இப்புதிய விடியல், வீசுகின்ற புதிய ஒளியை நமக்குள் பாய்ச்சி, நம் உடலையும் மனதையும் ஒளிவீசச் செய்வோமா? கதிரவனின் ஒளிபடாத மரமும் செடியும் வளர்ந்து, கனிகொடுக்க இயலாதல்லவா? இருளை ஆளுகிறவன், உங்களை ஆள வாய்ப்பளிக்காதீர்கள். உங்கள் மனைமாட்சியில், தலைவர்களே உங்களை தலை நிமிர செய்துள்ள உங்கள் மனைவியிடம், எந்த அதிகாரமும் செலுத்த வேண்டாம் என உங்களை உணர்த்துகிறேன்.

மங்கையரே, உங்கள் இல்ல தலைவரிடம் உண்மையான அன்பை விதைத்துவிடுங்கள். தியாகத்தின் உருவமாம் பெற்றோரே, பிள்ளைகளுக்கு உங்கள் நேரத்தை செலவு செய்தல்தான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் உண்மையான முதலீடு என்பது உங்களுக்கு தெரிவிக்க விழைகிறேன். வயது முதிர்ந்த பெற்றோருக்கு நீங்கள் எத்துனை நன்மை செய்தாலும், அவர்களுக்கு நீங்கள் இன்னும் கடன்பட்டுள்ளீர்கள் என்பதனை மறவாதீர்கள்.

உங்கள் உடன்பிறப்புகளிடம் எதையும் எதிர்பாராமல் இயன்றவரை பகிர்ந்து, உங்கள் உறவினை தொடருங்கள் என ஆலோசனைகூறி வாழ்த்துகிறேன். உங்கள் குமுகாயத்தில், பிறருக்கு பயன் தரும் உப்பாகவும், ஒளியாகவும் உங்களையே கரைத்து கொள்ளுங்கள். இதுதானே இருள் நீக்கி தன்னுள் ஒளிபாய்ச்சினவரின் விழுமியங்களாகும்.

சிறுதீபம் ஏற்றப்பட்ட இடத்தினின்று, இருள் அகன்றுவிடுமே! “தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக்கொண்டிருங்கள்” என்ற விவிலியத்தின் வார்த்தைகளும், ஏனைய புனித நூல்களும், நம்மை ஒளி வீசவே அழைக்கிறதல்லவா? இப்புதிய அருணோதயத்தில் அனைவருக்கும் பயனுள்ளோராய் வாழ இறைவன் நம் எல்லாருக்கும் அருள் புரியட்டும் என உளமார வாழ்த்துகிறேன். அதனால், இறைவனின் ஆசிகள் உங்களை பின்தொடருவதாக.

பேரருள் திரு. திமோத்தி ரவீந்தர்
பேராயர். தென் இந்திய திருச்சபை கோவைத் திருமண்டலம்

The post தீமையை வெறுத்து நன்மையை பற்றிக்கொண்டிருங்கள்! appeared first on Dinakaran.

Tags : Christianity ,
× RELATED இதயம் காணும் இறைவன்